கிளானை ஞானவைரவப் பெருமான் ஆலயம் ஐந்தாவது மகா கும்பாபிஷேகங்கண்டு
பெரு வளர்ச்சி பெற்று நிற்கின்றது.

1988 விபவ ஆண்டு சித்தரைத் திங்கள் 17ம் நாள் 29.04.1988 வெள்ளிக்கிழமை மாவை கிளானை ஞானவைரவப் பெருமாள் ஆலயத்தில் நான்காவது கும்பாபிஷேகம் இனிது நிறைவு எய்தியது. நல்லனவும் தீயனவும் காலச்சக்கரத்தில் சுழன்று வருவது வரலாறு நியதியாகின்றது. தமக்கு வந்த இன்னல்களிலிருந்து தம்மைக் காத்தருளிய வைரவப் பெருமானின் ஆலயத்தினை புனருத்தாரணஞ் செய்து1988 சித்திரை மாத்தில் புனராவர்த்தன கும்பாபிஷேகங் கண்டு சற்று நிம்மதியுடன் வாழ்ந்த ஊர்மக்களின் வாழ்வியலில் மீண்டும் யுத்த முழக்கங்கள் 1990ம் ஆண்டு வைகாசி மாத்தில் வாழ்விடங்களைய், உடைமைகளையும் இழந்து, உயிரைக் காக்க வேறிடங்களைத் தேடியோட வேண்டிய நிலை மிக சடுதியாகவே ஏற்பட்டது.

20 வருடங்கள், எத்தனையோ மாற்றங்கள். நித்திய, நைமித்திய பூசைகள் எதுவுமின்றி ஆலயம் மூடிக்கிடந்தது. 2009ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் கொடி யுத்தம் முடிவுக்கு வந்துவிட்ட பின்னரும். 2010ஆம் ஆண்டு வரை கிளானை கிராமத்துக்கு மக்கள் மீளத் திரும்புவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

படிப்படியாக மக்களின் மீள்குடியேற்றம் ஆரம்பமானது. எம் பெருமான் ஆலயம் எக்காலத்திலும் அனைத்து கிரமாத்து மக்களையும் ஆன்மீகத் தளத்திலும் சமூக உணர்வுத் தளத்திஷலம் இணைக்கின்றஒரு சிறந்த மையமாகவும், சமூக நிறுவனமாகவும் விளங்குகின்றமை அதன் பெருஞ்சிறப்பாகும். ஊரை விட்டு, உறவுகளை விட்டு பிரிந்தவர்களெல்லாம் கூடும் இடமாக ஆலயம் அமைந்தது. ஆலயம் இல்லாத இடத்தில் குடியிருப்பதில்லை என்ற எண்ணம் எல்லார் மனதிலும் இறுக்கமாக பற்றிக் கொண்டது. ஊர் கூடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நின்றுபோன பூசைகள், வழிபாடுகளை ஆரம்பிப்பதற்கான மார்க்கங்கள் ஆராயப்பட்டன.

தருமங்களை ஒருவன் புதிதாகச் செய்வதைக் காட்டிலும் முன்னோர்கள் செய்தவற்றைக் காப்பாற்றுவது இரண்டு பங்கு புண்ணியத்தை தரவல்லது. பழைய ஆலயத்தையும் பிம்பங்களையும் விதிப்படி திருத்தியமைத்து மகா கும்பாபிஷேகம் செய்வித்தால் நான்கு மடங்கு புண்ணியம் கிடைக்கப் பெறுவதுடன் இறை உலகை அடைந்து இறைவன் திருவடி நிழல் வாழ்வைப் பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு. இந்த இறை உணர்வால் உந்தப்பெற்ற பலரும் கூடி பாலஸ்தாபனத்திற்கான நாளை வகுத்தனர். 2011ஆம் ஆண்டு ஆனித்திங்கள் 25ஆம் நாள், 10.07.2011 பாலஸ்தாபனஞ் செய்வதற்கு திருவுளங்கூடியது. ஊரை எல்லாம் ஒருங்குகூட்டி, ஓருமைப்பாட்டைக் காத்து. தேடிய பொருளை எல்லாம் இழந்த நிலையிலும், இருக்கின்றதைக் கொண்டு தெய்வ காரியங்களை நிறைவேற்ற பலரும் துணிவு கொண்டனர்.

எப்பொழுதுமே ஆலயத்திருப்பணி வேலைகளின் முன் நிற்பவர் அமரர் வைத்தி சண்முகலிங்கம் அவர்கள். அவர் வாழுங் காலத்திலேயே அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சந்திதியை புனருதாரணஞ் செய்வதற்கான முன் ஆயத்தங்களையும், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் சந்நிதியை புதிதாக அமைப்பதற்குரிய நிலத்தை வகுத்தும், நல்ல நாளில் அத்திவாரத்தை இட்டும் முருகன் சந்நிதியை அழகுற அமைத்தும் பிரதிஷ்டைக்குரிய விக்கிரகங்களை செய்வித்தும் வைத்தார். அவர் இறைவனடி சேர்ந்த பின்னர், அவரது குடும்பத்தவர்கள் கோவில் திருப்பணியில் குடும்பத் தலைவர் விட்ட குறையை தொட்டு முடித்து விநாயகர், முருகன் சந்நிதிக்குரிய கும்பாபிஷேக கிரியைகளையும் முன்னின்று செய்து முடித்தார்கள்.

ஆதிகாலத்தில் திருகொன்றை மரநிழலில் சூல வடிவில் எழுந்தருளியிருந்த வைரவப் பெருமானுக்கு கல்லாலயம் அமைதது குடமுழுக்கும் செய்வித்த சங்கரப்பிள்ளை சின்னத்தம்பி (சாணையர்) குடும்பத்த்து வழிவந்தவர்கள் அமரர் சங்கரப்பிள்ளை, அமரர் கந்தையா, அமரர் சரவணமுத்து குடும்பத்தவர்கள் ; மற்றும் திருமதி.அன்னலட்சுமி சோமசுந்தரம் குடும்பத்தவர்கள் அமரர் இளையவர் சங்கரப்பிள்ளையின் (களாக்கர்) மகன் சர்வானந்தன், அமரர். சிவநேசன் சின்னத்தம்பு(பொலிஸ்) குடும்பத்தவர்கள் சகலரும் இணைந்து கர்ப்பக்கிருகத்தையும் கர்பக்கிருக விமானத்தையும், வர்ணம் தீட்டியும், நிருத்த மண்டபத்தையும் செம்மைப்படுத்தியும், முன்னிருந்த அர்த்த மண்டபத்தினையும், மகாமண்டபத்தினையும் பெயர்த்த விசாலமாக்கிப் புதுப்பித்தும், எல்லாவற்றிக்கும் வர்ணம் தீட்டீயும், உற்சவ மூர்த்திக்கான சபையை புதிதாக அமைத்தும், மண்டபங்களுக்குரிய நிலத்திற்கு தெராசோ பதித்தும், மூலமூர்த்திக்கும் மூலஸ்தான கலசத்திற்குரிய கும்பாபிஸேகத்தினையும் நிறைவு செய்துள்ளார்கள்.

சின்னத்தம்பி சிவராசா (புதுக்தோட்டம்) குடும்பத்தில் வந்துத்தித்த திரு, பார்த்திபன் அவர்கள், மிகவும் விசாலமான பாரிய மண்டபத்தினை ஊரவரெல்லாரும் கூடினும் உள்ளடக்கத்தக்கதாக அமைத்துள்ளார். ஊரிலுள்ளவர்கள் பலர் ஒன்றுகூடி பாரிய வசந்த மண்டபத்திற்குரிய 10 தூண்களை நீர்மாணிப்பதற்குpய பொருளுதவியையும், நிதியுதவியையும் வழங்கியுள்ளார்கள்.

உற்சவகாலங்களில் எம்பெருமான் அழகுற எழுந்தருளி வீதிவலம் வருவதற்குரிய வகையில் திரு,சிவராசா பார்த்திபன் அவர்கள் மிகவும் விசாலமான வசந்த மண்டபத்தினை அமைத்தும், நாய் வாகனம்ஒன்றினையும், காவு கொம்புகளையும் பிள்ளைத்தண்டுகளையும் உபயஞ் செய்துள்ளனார்.

திரு.சங்கரப்பிளை சர்வானந்தன் அவர்கள் வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட நியதிகளுக்கமைவான அழகு மிகுந்த எழுந்தருளி விக்கிரகம் ஒன்றினை தென்னிந்தியாவில் இருந்து தருவித்து பிரதிஸ்டை செய்துள்ளார்.

           

              நீலுறு சுடரின் மெய்யும் ஞெகிழிகள் அகற்றும் தாளும்                 

                               ஆலமதுயிரிக்கும் செங்கேழ் அரவற்றரையுஞ் சென்னி                                  

                          மலைகள் அனந்த கோடி வயின் வயின் பெயரும் மார்புஞ்                       

சூலமும் பரசும் காணும் துடியும் ஏந்திய பொற் தோளும்

                                                                                                     வைரவர் தோற்றம், கந்தபுராணம்.

   

அமரர் திரு.கந்தவனம் மயில்வாகனம் (சீனியர்) குடும்பத்தவர்கள் ஆலயப்பிரகாரத்தில் நிலமெடுதது நல்ல நானில் அத்திவாரம் இட்டு, பூதேவி, சிறிதேவி சமேத மகாவிஷ்ணு பெருமானுக்கு அழகிய ஆலயம் ஒன்றினை அமைத்து, விக்கிரங்களை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தினையும் நிறைவு செய்துள்ளார்கள். இக்குடும்ப வழித்தோன்றலான திரு மயில்வாகனம் தேவராசா அவர்கள் வைரவப்பெருமான் ஆலயத்திற்கு குதிரை வாகனம் ஒன்றைச் செய்து வழங்குவதற்குரிய ஏற்பாடுகளில் முன்நிற்கின்றார். நவராத்திரிகால மகாநோன்பு நாளில் வைரவப்பெருமான் வீறுடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.

பாரியவசந்தமண்டபம் உட்பட முன்மண்டபங்கள் அனைத்தினதும் நிலத்திற்கு ரெராசோ பதிப்பதற்குரிய முழுச்செலவையும் அமரர் வல்லிபுரம் இராசதுரை (சாத்தாவத்தை) அவர்களின் மகன் திரு. சற்குணலிங்கம் பொறுப்பேற்று தளங்களுக்கருய ரெராசோ வேலையை செம்மையாக நிறைவு செய்துள்ளார். வாகை மரத்தடியில் சின்னஞ்சிறிய வளைவுக்குள்ளிருந்த நாகதம்பிரானை திரு. சிவராசா பார்த்திபன் அவர்கள், பரிவாரத்தில் அவருக்குரிய இடத்தினை முறையாக வகுத்து அழகிய கோவிலையுங் கட்டி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தினையும் நிறைவு செய்துள்ளார்.

திரு.சங்கரப்பிள்ளை திரு. நடராசா குடும்பத்தவர்களின் பேருபலயத்தினால் காளி அம்பாள் வழிபாடு தொன்று தொட்டு இருந்து வருகின்றது. இடம்பெயர்வு காலத்தில் தொலைந்து போன காளிஅம்பாளை, புதிதாக வடிவமைத்து அம்பாள் சாந்நிதிக்குரிய அமைவிடத்தினை தக்க ஆசாரியர்களைக் கொண்டு சரியாக வகுத்தும் அழகிய கோவிலை கட்டுவித்தும் காளி அம்பாளை பிரதிஷ்டை செய்தும் திரு.சங்கரப்பிள்ளை திரு.நடராசா குடும்பத்தவர்கள் கும்பாபிஷேகத்தினையும் நிறைவு செய்துள்ளார்கள்.

கோவிலுக்குரிய பாரிய அளவு தண்ணீர் தேவைகளை நிறைவு செய்யும் அளவிற்று கோவிலிலுள்ள இரண்டு கிணறுகளிலுமுள்ள நீர்மட்டம் பற்றாக்குறையாக இருப்பது பெருங் குறைபாடாக இருந்தது. இந்த தேவை நிறைவு செய்யப்பட்ட வேண்டிய நிலையில் இந்த குறையை நிவர்த்தி செய்வதற்கு, திரு.நடராசா தெய்வேந்திரம் குடும்பத்தவர்கள் முன்வந்து குழாய்க்கிணறு ஒன்றை அமைப்பித்து நீர்த் தேவையைப் பூரத்தி செய்துள்ளார்கள்.

தண்ணீரை சேமித்து வைப்பதற்குரிய தண்ணீர் தாங்கியை உரிய உயரத்தில் அமைத்து அதற்குரிய செலவினை திரு. கனகலிங்கம் (முன்னைய கொல்லங்கலட்டி கிராம அலுவலர்) பொறுப்பேற்றுள்ளார்.

நீரிறைக்கும் இயந்திரம் (மோட்டர்) நீர் விநியோகத்திற்குரிய குழாய்க்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்குரிய செலவினை திரு. கனகலிங்கம் குடும்பத்தவர்கள் மீளளிக்க ஒப்புதல் அளித்துள்ளார்கள். தனது வாழ்நாளில் பெரும்பகுதியை ஞானவைரவப் பெருமான் ஆலய சேவைக்காக அர்ப்பணித்து ஞானவைரவப்பெருமான் திருவடிநிழல் சேர்ந்த அமரர் சின்னத்துரை காங்கேயன் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தவர்கள் நாய் வாகனம் ஒன்றினை உபயம் செய்துள்ளார்கள்.

நெடுங்காலத்திறகு முன்னரே வைரவப் பெருமான் ஆலயம் அமரர் கந்தையா சின்னத்துரை (நுவரெலியா) குடும்பத்தவர்களது பேருபயத்தினால் மணிக்கோபுரத்தை கொண்டிருந்தது. கோவிலின் இன்றைய வளர்ச்சிப் பரிமாணத்திற்கு அமைய புதிதாக மணிக்கோபுரத்தினை கட்டுவித்தும், முன்னிலும் பேரொலி எழுப்பத்தக்கதாக பெரிய அளவிலான புதிய மணி ஒன்றினை வார்பித்தும் முன்னைய மணிக்கோபுர உபயகாரர் திரு. சின்னத்துரை குடும்பத்தினரான திரு. நடராசா சிவானந்தம் அவர்கள் பொறுப்பேற்றுநிறைவு செய்துள்ளார்.

எம்பெருமான் ஆலயத்தின் எதிர்கால வளர்ச்சி, வளரும் இளஞ்சந்தத்தியிலேயே தங்கியிருக்கின்றது. எக்காலத்திலும் கிளானை வாழ் இளஞ்சந்தியினரது கோயிலின் வளர்ச்சியில் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையும் முன்நிறுத்திப் பேசப்பட வேண்டியது. கோயிலின் புனருத்தாரணப் பணிகள், கும்பாபிஷேகம், அதனைத் தொடர்ந்து உற்சவகாலங்களில் அவர்கள் ஆற்றிய பணிகள் தவறின்றி இங்கே குறிப்பிடப்பட வேண்டியவையாகும்.

 

ஞானவைரவப் பெருமான் ஆலயம் பரிவாரமூர்த்திகளுக்கான சந்நிதிகள், விசாலமான மண்டபங்களுடன் புத்தெழுச்சி பெற்ற மீண்டெழுந்து நிற்கின்றது. ஆலயத்தின் இந்தப் பேரெழிலை மேலும் சுற்றப்புற மதில்கள் சட்டகப்படுத்தி நிற்கின்றன. ஆலயத்தின் சுற்றமதில் மிக குறுகிய நாளில் கிடுகிடுவென கட்டி முடிக்கப்பட்டது. இளஞ் சந்ததியினருடன் இன்னும் வயது முதிர்ந்தோரும் தோளோடுதோள் கொடுத்து நிர்மாண வேலைகள் பலவற்றை சுற்றுமதிலுடன் வாகன சாலையில் (பெரும்பகுதி) நிறைவு செய்துள்ளார்கள்.

 

கோயில் சேவைக்குரிய ஏனைய கட்டிடத் தேவைகளும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடப்பட வேண்டும். அமரர் சின்னையா கணேசு குடும்பத்தவர்கள் கோயிலுக்குரிய நிவேதனங்கள் ஆசார முறைப்படி பாகஞ் செய்வதற்கேற்ற வகையில் மடப்பள்ளி ஒன்றினை பொறுப்பேற்று அமைத்து உதவியுள்ளார்கள்.

திருமதி புவனேஸ்வரி வைத்திலிங்கம் குடும்பத்தவர்கள் களஞ்சியசாலை ஒன்றை அமைத்து உதவியுள்ளார்கள். கோயிலுக்கு வரும் பொருட்கள் திரவியங்களை பேணிப்பாதுகாப்பதற்கு பேருதவியாக அமைகின்றது.

வாகனசாலை ஊர் மக்களது உடலுழைப்பால் கட்டியெழுப் பட்டியிருப்பினும், அதற்குரிய பொருட் செலவுகளை திருமதி. மகேஸ்வரி சண்முகநாதன் குடும்பத்தவர்கள் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோயில் அர்ச்சகர் குடும்பம் கோயிலுக்கு அருகேயுள்ள தரும சொத்தாக வழங்கப்பட்ட காணியிலேயே குடியிருக்க வேண்டும் என்பது மரபாகிவிட்டதொன்று. சந்ததி சந்ததியாக இருந்து வந்துள்ள நடைமுறையாகும். முன்னோhர்களான அனந்தர், கந்தவனம், மேன்மைக்குரிய தம்பிரான் ஐயா, செல்வரத்தினம் ஐயா (விமலாதேவி அம்மா) ஆகியோர் குடும்பங்கள் எல்லாம் கோயில் அருகிலேயே வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. தொன்றுதொட்டு வரும் இந்த மரபு பேணப்பட வேண்டும் என்ற நியதிக்கமைய ஊர் பொதுமக்களது உதவியுடன் கோயில் குருக்களுக்குரிய வீட்டு நிர்மாண வேலைகள் முடிவுறும் நிலையிலுள்ளது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது திருவருள் வாக்கு எங்களது கோயிலின் முகப்பு வாயிலை அழகுறசெய்யம் இரண்டு விடயங்கள் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கவை.

கோபுர தரிசனம் கோடிபுண்ணியம் என்பது திருவருள் வாக்கு. எங்களது கோயிலின் முகப்பு வாயிலை அழகுறசெய்யும் இரண்டு விடயங்கள் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கவை.

  1. கோயில் முகப்பு வாயிலையும் பிரதான வீதியையும் இணைக்கின்ற பாதை இந்தப்பாதை அமைப்பதற்குரிய காணியை கோயிலிற்கு அர்ப்பணித்துள்ள அமரர் வே.கதிர்வேலு குடும்பத்தவர்கள் என்றும் நினைவில் நிறுத்தப்படவேண்டியவர்கள்.
  2. கோயிலின் தோரணவாயில், திரு சிவராசா பார்த்தீபன் அவர்கள் தனது அமரத்துவமெய்திய உறவினர் திருமதி செல்லமுத்து வேலுப்பிள்ளை ஞாபகாரத்தமாக அமைத்துள்ள அழகிய வில்வளைவுடன் இரு சிற்பத்தூண்கள் தாங்கிய தோரண வாயில், எழில்மிகு தோற்றப் பொலிவுடன் கூடிய வைரவப்பெருமானின் சிற்பத்தை கொண்டுள்ளமையானது கோயிலில் கோபுரம் இல்லாத குறையை போக்கி நிற்கின்றது. இடப்பெயர்வு காலதத்தில் அனாதரவாக இருந்த ஆலயத்தில் இருந்து பல உபகரணங்கள் தளபாடங்கள் தொலைந்து போயின இல்லாதனவற்றை மீளவும் சேர்ப்பதில் பல வைரவ அடியார்கள் அக்கறை கொண்டுள்ளார்கள். பாரிய ஆளுயர குத்து விளக்குகள், பூஜைப் பாத்திரங்கள், அடுக்குத்தீபங்கள், சோடச உபசாரம், குடை, அருட்பிரசாதப்பாத்திரங்கள், அபிஷேகக்கும்பங்கள் வைப்பதற்குரியபீடம், வெள்ளித் தகட்டினால் வடிமைக்கப்பட்ட யாககுண்டம், தேவையான அளவிற்கு சமையற்பாத்திரங்கள், தளபாடங்கள் ஆகியன ஞானவைரவ அடியார்கள் பலரால் உபயம் செய்யப்பட்டுள்ளது.

திருவிளக்கேற்றல்

ஆலயங்களில் திருவிளக்கேற்றல் நல்லபலன்தரும் அளப்பரிய சேலையென புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எங்களது ஊருக்கு மின்சாரவசதி கிடைக்காத காலத்தில் எண்ணை சுடரில் தீபம் ஏற்றி எமது ஆலயத்தினை ஒளிபெறச் செய்த வரலாற்றைக் கொண்டவர்கள் எமது கிளானை ஞானவைரவர் ஆலய நிழலில் குடியிருக்கும் அமரர் க.வைரமுத்து குடும்பத்தவர்கள். தங்களது வீட்டில் விளக்கு எரிவதற்கு முன்னரே தங்களது வீட்டுக்கு முன்னால் இருக்கும் ஞானவைரவப் பெருமான் ஆலயத்தில் விளக்கெரிய வேண்டும் என்பதனை வெகுதிண்ணமாகக் கொண்ட இக்குடும்பம் வழிவழியாக ஆலயத்திற்கு திருவிளக்கேற்றும் தொண்டை தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.

தனி ஒரு பிரகாரத்தில் ஆலயம் அமைந்திருந்த காலத்தில் தொடங்கிய இந்த ஆலய சேவை இன்று ஆலயம் பல பரிவார சந்திதிகள் பல விசாலமான மண்டபங்கள், வீதிகள், சுற்றுப்பிரகாரங்களுடன் பிரமாண்டமான வளர்ச்சி பெற்றபொழுதிலும் ஆலயம் முழுவதுமே ஒளி வெள்ளத்தில் மிதக்கத்தக்கதாக அமரர் வைரமுத்து குடும்பத்தவர்கள் திருவிளக்கிடும் அரிய சிவதொண்டை தொடர்கிறார்கள். இவ்வரிய தொண்டினை அமரர் க.வைரமுத்து அவர்களின் மருமகன் திரு.மு.ஜெகதீஸ்வரன் அவர்கள் முன்னின்று செயற்படுத்தி வருகிறார்.

ஆலயத்தில் இடம்பெறும் விழாக்கள் பூஜைகள் வழிபாடுகனின் போது ஒலிக்கும் வேதமந்திரங்கள், மேளவாத்தியங்கள், கூட்டுப்பிரார்த்தனை வழிபாடுகளின் போது ஒலிக்கும் திருமுறைகள் ஆகியவற்றை சுற்றயலில் உள்ளவர்கள் கோயிலக்கு வரமுடியாதவிடத்தும் ஒலிவடிவில் கேட்டுத் தரிசிக்கத்தக்கதாக ஒலிபரப்பி ஒன்றினையும் இக்குடும்பத்தைச் சேர்ந்தவரான திரு.மு.ஜெகதீஸ்வரன் வழங்கியுள்ளார

கிளானை வாழ் மக்கள் பலரும் பல வழிகளில் எம்பெருமான் ஆலயம் பெருவிருட்சமாக நிழல் பரப்பி நிற்க பல வழிகளிலும் அரும்பணிகள் ஆற்றியுள்ளார்கள். இவற்றையெல்லாம் எழுத்துக்களில் குறிப்பிடுவதில் தவறுகள் நேர்ந்திருக்கலாம் பிழை பொறுக்கும்படி வேண்டுகின்றேன்.

21.06.1988 ஆம் ஆண்டு கும்பாபிஷேக மலரில் ஆசிரியர் க. துரைரத்தினம் அவர்களினால் எழுதி வெளியிட்ட மாவை கிளானை ஞான வைரவர் ஆலய வரலாறு 2014 ஆண்டு கும்பாபிஷேக மலரில் மறுபதிப்புச் செய்யப்படுகின்றது.