முதலாவது கும்பாபிஷேகம்:

வைரவப் பொருமான் மீது மிகுந்த பக்தி கொண்ட ஆசாரசீலராகிய சங்கரப் பிள்ளை சின்னத்தம்பி (சாணையர்) என்பர் கொன்றை மரத்தின் கீழ் சிறு பந்தலில் எழுந்தருளியிருந்த வைரவப் பெருமானுக்கு மண்டபம் அமைக்க விரும்பினார். 1944ஆம் ஆண்டளவில் அப்போது நகுலேஸ்வர ஆலய ஆதீனமாக விளங்கிய குமாரசுவாமிக் குருக்களைக் கொண்டு ஆலய நிர்மாணத்துக்கான நிலம் வகுக்கப்பட்டது. தற்போதுள்ள மூலஸ்தாபன மண்டபத்தையும் அதன் முன்னாலுள்ள மண்டபத்தையும் முன்னின்று கட்டுவித்தார். மண்டபம் நிறைவுற்றதும் நடைபெற்ற கும்பாபிஷேகத்துடன் அலங்கார பூசைகள் ஆரம்பமாகி சுவாமி வீதிவலம் வரும் வைபவமும் இடம்பெறத் தொடங்கியதனால் சின்னத்தம்பி குடும்பத்தினர் அலங்காரத் திருவிழாக்களை ஆரம்பிக்கும் முதற் திருவிழாவைத் தற்பொழுதும் செய்து வருகின்றனர்.தம்பிரான் ஐயர் பூசகராக இருந்த இந்த முதலாவது கும்பாபிஷேகத்தைச் சைவக் குருக்களாகிய சோமஸ்கந்தரவர்கள் சிறப்பாகச் செய்து வைத்தார்கள்.

மண்டபம் அமைக்கும் பணிநடைபெற்றுக் கொண்டிருந்த போது திருமஞ்சனக்கிணறு அமைக்கும் பணியை சின்னவி வேலுப்பிள்ளை, வயிரவி வல்லிபுரம், சின்னப்பொடி முருகர் ஆகியோரும் அவர்களது சுற்றத்தவரர்களும் மேற்கொண்டனர். அவர்களது முயற்சி கைகூடியது. அமிர்தம் போன்ற தீர்த்தத்தையுடையது எமது திமஞ்சனக் கிணறு ஆகும். பொதுமக்களுக்கொன ஒரு கிணறு அமைக்கப்படாததனால் வழிபடவரும் அடியார்கள் திருமஞ்சனக் கிணற்றையே தமது தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்தனர். தம்பிரான் ஐயர் கோயிற் புனித்தை மிகவும் போற்றுபவர். தீர்த்தம் எடுக்கும் திருமஞ்சனக் கிணறு புனிதம் இழப்பதை விரும்பாத அப்புண்ணிய சீலர் பொதுமக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் ஆலயத்துக்கு முன்பாக ஒரு கிணறு அமைக்க வேண்டுமென விரும்பினார். அவர்களின் வேண்டுகோளிற்கிணங்கப் பொதுமக்கள் வழங்கிய பொருளுதவியைக் கொண்டு கோயிலில் தென்கிழக்கு மூலையில் ஒரு கிணற்றை அமைப்பித்தார்.

இரண்டாவது கும்பாபிஷேகம்;

வைரவப் பொருமானைச் சூலத்தில் வழிபட்ட அடியார்கள் அவரை விக்கிரக ரூபத்தில் கண்டுவழிபட வேண்டுமென அவாவுற்றனர். அதுவரை காலமும் மூலஸ்தானத்தில் இருந்து சூலத்திற்குப் பதிலாக அழகிய திருவுருவத்தை உடையதும் ஜெகஸ்ஜோதியாகத் திகழ்வதுமான தற்போது உள்ள திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

முதலாவதுகும்பாபிஷேகம் நிகழ்ந்து பன்னிரண்டு ஆண்டுகளின் பின் திருவுருவில் எழுந்தருளிய வைரவப் பெருமானுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னைய கும்பாபிஷேகத்தை செய்வித்த சங்கரப்பிள்ளை, கந்தையா, சரவண முத்து ஆகியோர் கும்பாபிஷேகத்தை செய்வித்தார்கள்.

மூன்றாவது கும்பாபிஷேகம்

வைரவப் பொருமானின் திருவருட் கடாட்சம் கிட்டியதால் எம்மூரவர்கள்  அனைவரும் வசதியான வாழ்க்கை வாழும் பேற்றினைப் பெற்றனர். வைரவப் பெருமானை வணங்கி வரும் அடியார்களின் தொகை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வந்தது. பக்தர்கள் நின்று வழிபடுவதற்கு மண்டபம் போதாமல் இருந்தது. ஊர் மக்கள் வைரவப் பெருமானுக்குத் தனது உடல் பொருள் அனைத்தையையும் அர்ப்பணிக்கக்கூடிய ஆசாரசீலராகிய சின்னத்தம்பி சங்கரப்பிள்ளை என்ற பெரியாரின் தூண்டுதலால் உந்தப்பட்ட ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொருள் உதவி அளித்ததுடன் சரீர உதவியும் நல்கி அமைக்கப்பட்டதே தற்பொழுதுள்ள விசாலமான முன் மண்டபம் ஆகும். எழுந்தருளி மண்டபத்தை மேலும் பொலிவுறச் செய்தார். மணிக்கோபுரத்தை கந்தையா சின்னத்துரை (நுவரெலியா) என்பவர் அமைத்து ஆலயத்திற்கு வரமுடியாத வைரவ பக்தர்களும் வைரவப் பெருமானை ஒலி வடிவில் வழிபடுவதற்கு வாய்ப்பளித்தார். காளிதேவிக்கொனப் பொதுமக்களால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் காளிதேவியின் விக்கிரகத்தை அமைத்துப் பிரதிஷ்டை செய்தவர் சங்கரப்பிள்ளை திரு.நடராசா ஆவர். அதுவரை காலமும் மூலஸ்தானம் மூடுசாந்தாகவே விளங்கியது. மூலஸ்தானத்தைத் தூபி வடிவிற்காண விரும்பினர் பொதுமக்கள். தூபி அமைக்கும் பணியை வைத்திலிங்கம் சண்முகலிங்கம் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். அத்திருப்பணி முடிவுற்றதும் சங்கரப்பிள்ளை சின்னத்தம்பியின் குடும்பத்தினரால்மூன்றாவது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு முழு மண்டலமாக அலங்கார உற்சவங்கள் நடைபெற்றன. கீரிமலை சிவஸ்ரீ ஐயம்பிள்ளைக்குருக்கள் மூன்றாவது கும்பாபிஷேகத்தை சிறப்பாகச் செய்து வைத்தார்.

நான்காவது கும்பாபிஷேகம்:

நான்காவது கும்பாபிஷேகம் நடைபெற்று முழு மண்டலமாக அலங்காரத் திருவிழாக்கள் வெகு சிறப்பாக நிகழ்ந்து முடிவடைந்துள்ளன. வைரவப் பெருமான் மீது மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டு வழிபட்டு வருவதனால் உயர்நிலை அடைந்தவர் அன்பர் வயித்திலிங்கம் சண்முகலிங்கம் ஆவர். விநாயகருக்கு ஓராலயம் அமைக்க வேண்டுமென அவர் விரும்பினார். அத்திருப்பணியை மிகவும் குறுகிய காலத்தில் நிறைவேற்றியவர். அத்துடன் நிற்காது வைரவப் பெருமானுக்குப் பலிபீடம் அமைத்ததுடன் மூலஸ்தானத்திலும் மாபிள்கள் பதிக்கும் பணியை மேற்கொண்டு நிறைவேற்றினார்.  அந்நிகழ்வால் நடைபெற்றதே நான்காவது கும்பாபிஷேகமாகும். கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக வயித்திலிங்கம் சண்முகலிங்கம் அவர்களால் செய்யப்பட்டு முழு மண்டலமாக அலங்காரத் திருவிழாக்கள் இடம்பெற்று மண்டலாபிஷேகமும் கும்பாபிஷேகம் செய்பவர்களாலேயே செய்யப்பட்டுள்ளது. நான்காவலது கும்பாபிஷேகம் நிகழ்ந்து அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த நடுப்பகுதியில் பரிபாலனசபைச் செயலாளர் ச.நகுலேஸ்வரனும் பொருளாளர் வ.முருகையாவும் கும்பாபிஷேக மலர் வெளியிட வேண்டுமென விரும்பியதால் மலர்ந்ததே இக்கும்பாபிஷேக மலராகும். நான்காவது கும்பாபிஷேகத்தின் போது குருக்களாக இருந்து வெகு சிறப்பா அபிஷேக ஆராதனைகள் செய்தவர் ஸ்ரீரேணுகாச்சிரம் பட்டத்தரசு சிவஸ்ரீஇ.உருத்திரபுரேஷ்வரக்குருக்கள் ஆவார். எமது ஆலயத்துடன் மிகுந்த தொடர்புடைய சிவஸ்ரீ ஐயம்பிள்ளைக்குருக்களின் பேரனுமாவர். எமது ஆலய பூசகரின் உறவினருமாவர்.

பரிபாலன சபை:

முன்பு குறிப்பிட்டுள்ளது போல் ஆலயத்தைப் பரிபாலிக்கும் பொறுப்பைப் 11.04.1979 அன்று பரிபாலனசபை பொறுப்பெடுத்துகொண்டது. ஒரு குடும்பம் முன்னேறுவதற்கு மூத்தபிள்ளையின் வழிகாட்டல் காரணமாக விளங்குவது போல எமது பரிபாலனசபை கட்டுக்கோப்படன் இயங்குவதற்க வழிகாட்டியவர்கள் முதற் பரிபாலனசபை உறுப்பினர்களாகிய திருவாளர் மூ.நடராசா, மு.மார்க்கண்டு, க.துரைரத்தினம்,ச.குணரத்தினம், ச.திருநடராசா, மா. நடராசா, நீ.நாகராசா ஆகிய எழுவரே என்று கூறின் சாலப்பொருந்தும்.

ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பு நடைபெறும் ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டத்திற் தெரிவு செய்யப்படும். உறுப்பினர்கள் ஆலயத்தைப் பரிபாலிக்கும் பொறுப்பை மேற்கொண்டு வருகிறார்கள். இப்பொழுது இருக்கும் பரிபாலனசபை பத்தாவது நிர்வாக சபையாகும். ஆலய நிர்வாகத்தைப் பரிபாலன சபை மேற்கொண்டதன்பின் பலவித ஆக்கபூர்வமான பணிகளில் மேற்கொண்டு நிறைவேற்றி வருவதால் கோயில் வளர்ச்சியுற்ற வழிபடும் பக்தர்களின் தொகையும் அதிகரித்துள்ளது. பரிபாலன சபையின் நிர்வாகத்தின் போது பலர் உதவிகளை நல்கியுள்ளனர். கோயிலுக்கு அணித்தாக வதியதம் வயிரமுத்து கணேசதாசன் (பம்பாய்) என்னும் அன்பர் வைரவர் மீது மிகுந்த பக்தியும் அளப்பரிய நம்பிக்கையும் உடையவர். அவர் ஆலயத்திற்கு மின்னொளி அமைத்து இறைவன் ஜகஸ்ஜோதியாகத் திகழ வழிவகுத்ததுடன் அதற்காக வேண்டிய செலவைத் தொடர்ந்தும் செலுத்தி வந்துள்ளார். அவரது குடும்பத்தினரால் குதிரை வாகனம் ஒன்று செய்து வைக்கப்பட்டுள்ளது. அதுவரை காலமும் குருநாதர் குடும்பத்தினரால் செய்து வைக்கப்பட்ட நாய் வாகனம் ஒன்று மட்டுமே இருந்தது. அன்பர் சின்னக்கண்டர் சந்திரபாலன் என்பவர் வைரவர் மீது மிகுந்த பக்தி கொண்டவர் வெளிநாட்டில் வாழும் அவ்வன்பர் ஆலயத்திற்கென ஓர் ஓலிபெருக்கிக் கருவியும் சுவர்க்கடிகாரம் ஒன்றும் அன்பளிப்புச் செய்துள்ளார். ஆலயம் அமைந்திருக்கும் காணியை வழங்கிய வம்சத்தில் வந்துதித்த திரு.ஆ.காசிநாத உபாத்தியார் அவர்களும் தற்பொழுது எமது கிராமத்தில் வாழ்பவர்களில் முதியவர்களாகத் திகழும் திரு.கதிரிப்பிள்ளை தம்பையா, திரு.வயிரவி வல்லிபுரம் அவர்களும் பரிபாலனசபைச் செயலாளர் திரு.சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் அவர்களும் ஞானவைரவர் ஆலய வரலாற்றினை எழுதுவதற்கு வேண்டிய தகவல்களைத் தந்துதவியுள்ளார்கள். அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.